காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து... உயிர்ப்பாய் இருக்கும் வெடிபொருட்கள்.. செயலிழக்க வைக்கும் பணி தீவிரம்..

May 2, 2024 - 15:20
காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து... உயிர்ப்பாய் இருக்கும் வெடிபொருட்கள்.. செயலிழக்க வைக்கும் பணி தீவிரம்..

காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.  எஞ்சியுள்ள வெடி பொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி குண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் உள்ள வெடிமருந்து குடோனில் நேற்று (மே 1) வெடி மருந்துகளை இறக்கும்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கந்தசாமி, துரை, குருசாமி ஆகிய 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் நேற்று மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி எஞ்சியுள்ள வெடி பொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.‌ நேற்று மாலை வரை பணி நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் பணி தொடர்ந்தது. 

அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வெடி பொருட்களை செயலிழக்க வைக்கும் பணி நடைபெற்று வருவதால் கல்குவாரிக்குள் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரைத் தவிர வேற யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow