ஒருமுறை அழுத்தினால் 2 ஓட்டுகள்.. நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும்? வாக்களிக்கும்போது கண்டறிவது சாத்தியமா?

கேரளாவின் காசர்கோட்டில், மாதிரி வாக்குப்பதிவின்போது, ஒரு முறை ஓட்டு போட்டால் பாஜகவுக்கு இரு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப்பின், இது ஒரு நடைமுறைத் தவறு என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நேரடி வாக்குப்பதிவின்போது இப்பிரச்னை எழுந்தால் என்ன ஆகும்?

Apr 20, 2024 - 15:16
ஒருமுறை அழுத்தினால் 2 ஓட்டுகள்.. நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும்? வாக்களிக்கும்போது கண்டறிவது சாத்தியமா?

கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில், மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த 18ம் தேதி மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு இரு ஓட்டுகள் விழுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான LDF கூட்டணிக் கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணிக் கட்சிகளும் புகார் எழுப்பின. இவிஎம் தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணையின்போது, இப்பிரச்னை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய நிலையில், அதன் விசாரணையை தீவிரப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், EVM என்பது சோதனை செய்யப்பட்ட தனி இயந்திரம் எனவும், இப்பிரச்னை ஒரு நடைமுறைத் தவறுதான் எனவும், கேரளாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார். பெல் நிறுவனமே இந்த இயந்திரங்களை தயாரித்ததாகவும், வேகமான முறையில் அதனை செய்துமுடிக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் தேர்தல் அதிகாரி கூறினார். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு பதிலாக, வாக்குப்பதிவுக்கு முன் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்பிரச்னை பூதாகரமானதாவும் அவர் விளக்கமளித்தார். வாக்குப்பதிவு இயந்திரம் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை அனைவரும் நம்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் போது, மற்றொரு கட்சிக்கு ஓட்டு செல்வதும், ஒரு வாக்குக்கு இரு ஓட்டுகள் பதிவு செய்யப்படுவது என்பதும் இரு வெவ்வேறு பிரச்னைகளாக அறியப்படுகிறது. பொதுவாக ஒருவர் வாக்களிக்க செல்லும்போது, வாக்காளரை சரிபார்க்கும் பூத் அதிகாரி அவரது வாக்களிப்பு தொடர்பாக உள்ளே உள்ள அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார். அதனை முகவர்கள் குறித்து வைத்துக் கொண்டபின், அதிகாரி அனுமதிப் பொத்தானை அழுத்தியவுடன், வாக்காளர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார். அந்த அனுமதியைப் பயன்படுத்தி அவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க முடியும். இவ்வாறாகவே வாக்குப்பதிவு நடைமுறை நடைபெறுகிறது.

3 கட்ட பாதுகாப்பு அமைப்புகள் - அரசு அதிகாரிகளின் கண்காணிப்பைத் தாண்டி, தவறாகவோ, இரட்டை வாக்குகளோ பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வேளை அதுவும் சட்டவிரோதமாக அப்படி செய்து, அதற்கான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில்கூட, அதனை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். அதாவது, எந்த கண்காணிப்பை குற்றம்சாட்டி புகார் எழுப்பப்படுகிறதோ அதுவே பிரச்னையாக எழ வாய்ப்புள்ளது. ஒருவர் வாக்களிப்பதை டிஜிட்டலாக பதிவு செய்யக் கூடாது என்றபோது, பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் நடத்தும் வாக்குப்பதிவு போலியானது என ஆதாரங்களை வைத்து நிரூபிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

ஆக இதனை 99% நிரூபிக்கமுடியாது என்றபோதும், ஒருவேளை நிரூபித்தால் அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் எனவும் தேர்தல் ஆணையர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக இயந்திரக் கோளாறு பிரச்னையும், அரசியல் பிரச்னையும் இதில் ஆழமாக பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow