ஒரே நாடு ஒரே தேர்தல் - UCC அமல், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைப்பு : பாஜக தேர்தல் அறிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவதோடு உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 14, 2024 - 11:12
Apr 14, 2024 - 11:16
ஒரே நாடு ஒரே தேர்தல் - UCC அமல், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைப்பு : பாஜக தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு அமைத்த தேர்தல் அறிக்கையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம் எனக் கூறினார். 

அறிக்கையின்படி, இந்தியாவின் பெருமைமிகு தமிழ்மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ராமாயண உற்சவம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமான அறிவிக்கப்படும் என்றும் பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், திருநங்கைகளும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் எனவும் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றன. முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எனவும் கூறப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் எனவும் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்  எனவும் கூறப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow