ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் NCB அதிகாரிக்கு செக் ! இணையான பவரில் உள்ள மற்றொரு அதிகாரி விசாரணை..
ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்து வரும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB)துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன், போதைப்பொருள் டெல்லியில் இருந்து தான் அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் டெல்லி போலீசாருக்கு கூடுதல் தகவலையும் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் ஒரு குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 50 கிலோ அளவிலான மூலப்பொருள்கள் சிக்கியது. இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, திரைப்பட தயாரிப்பாளாரும் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.2000-கோடி மதிப்புடைய போதைப்பொருள்களை அவர் வெளிநாடுகளுக்கு கடத்திய அதிர்ச்சி தகவலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் வெளியிடப்பட்டது.
இதனிடையே, ஜாபர் சாதிக் கைது விவகாரத்தில், அவரின் வழக்கை விசாரித்து வரும் துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது. அதன்படி, ஞானேஷ்வர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஜாபர் சாதிக் பிப்ரவரி 15-ஆம் தேதியே தலைமறைவாகி விட்டதாக ஞானேஷ்வர் ஊடகங்களில் கூறிய நிலையில், சென்னையில் பிப்ரவரி 21-ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜாபர் சாதிக் பங்கேற்றிருக்கிறார். இதுகுறித்தும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபோன்ற விவரங்களை தெரிவித்து, மத்திய உள்துறை செயலருக்கும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைமை இயக்குநருக்கு புகார்கள் சென்றுள்ளது. இதைதொடர்ந்து, ஜாபர் சாதிக் விவகாரத்தில் துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிராக அவருக்கு இணையான பொறுப்பிலுள்ள மேற்கு மண்டல துணை தலைமை இயக்குநர் மணீஷ்குமார் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?