கேரளாவில் பரவும் திடீர் காய்ச்சல்... எச்சரிக்கும் மருத்துவர்கள்... தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்...

கேரளத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லை மாவட்டங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Apr 20, 2024 - 15:57
கேரளாவில் பரவும் திடீர் காய்ச்சல்... எச்சரிக்கும் மருத்துவர்கள்... தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்...

கேரளம் மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த  வாத்துகள் அடுத்தடுத்து இறந்துள்ளன. இறந்த வாத்துகளை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், வாத்துகளுக்கு எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, கேரளம் மாநிலம் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரளம் எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு ஆகிய 12 சோதனைச் சாவடிகளில், சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும்  கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில், கோழி, வாத்து  இறைச்சி மற்றும் கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பது குறித்து கண்காணித்து வரும் கால்நடை மருத்துவக் குழுவினர், வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக எச்5 என்1 தொற்றால் பாதிக்கப்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளில் இருந்தும், அவற்றின் கழிவுகளில் இருந்தும் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதன் அறிகுறியாக, காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் கூறுகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow