சென்னையில் 450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை-விசாரணை தீவிரம்
50 கோடி ரூபாய் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை
பிரபல கட்டுமான நிறுவனம் ஓசன் லைவ் ஸ்பேஸ் தொடர்பான 7 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 33 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைவ் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக ஏழு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றது.குறிப்பாக இந்த நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்கே பீட்டர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் அளவில் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக இந்த நிறுவனத்தை நடத்தி வருவதால் அவரது கோட்டூர்புரம் மற்றும் அசோக் நகர் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஓசன் லைவ் ஸ்பேஸ் நிறுவனத்தின் தொழில் பங்குதாரரான பாலசுப்பிரமணிய ஸ்ரீராம் தனது பங்கினை பிரித்துக் கொடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையாக வைத்து எஸ்.கே பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்டு 50 கோடி ரூபாய் எஸ்கே பீட்டர் மூலமாக கை மாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் சட்ட விரோதமாக பணம் கைமாறப்பட்டுள்ளதாக கருதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.இந்த நிலையில் தான் இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நடைபெற்றுள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓசன் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 33 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கை அடிப்படையாக வைத்து இந்த சோதனையானது நடத்தப்பட்டதாகவும்,ஓசன் லைவ் ஸ்பேஸ் நிறுவன உரிமையாளர் எஸ்கே பீட்டர் மற்றும் அவரது மனைவி இணைந்து புகார்தாரர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது நிறுவனத்தின் பங்கை 50 சதவீதத்தில் இருந்து பத்து சதவீதமாக குறைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் பங்குதாரரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி நிறுவனத்தில் இருந்து நீக்கி உள்ளதும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதில் 13 கோடி ரூபாய் மட்டுமே பணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் செட்டில்மெண்டாக 50 கோடி ரூபாய் எஸ்கே பீட்டர், புகார்தாரருக்கு கொடுத்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.50 கோடி ரூபாய் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?