நெல்லை: ரேசன் கார்டு வழங்கும் பணியில் சுணக்கம்
பெண்கள் பலர் புதிய ரேசன் கார்டு கேட்டு அதிக அளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
நெல்லை அருகே ரேசன் கார்டு வழங்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது. தாசில்தார் மோகனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொது விநியோக திட்ட அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து ரேசன் கார்டு தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக பெயர் நீக்கம், சேர்ப்பு, முகவரி மாற்றம் தவிர, புதிய ரேசன் கார்டு கோரி ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்வு செய்த அதிகாரிகள் புதிய ரேசன் கார்டு கொடுப்பது பற்றி வாய் திறக்கவில்லை.ஏனென்றால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஐந்து மாத காலமாக புதிய ரேசன் கார்டு அச்சடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
இது குறித்து வட்டார வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழக அரசு மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.இதில் சேர விரும்பும் பெண்கள் பலர் புதிய ரேசன் கார்டு கேட்டு அதிக அளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.தவிர, பலர் சர்க்கரை கார்டிலிருந்து அரிசி கார்டுக்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருப்பதால் விபரங்களை சரிபார்க்க அதிக நேரம் பிடிக்கிறது.எனவேதான் புதிய ரேசன் கார்டு அச்சடிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து மாத காலமாக புதிய ரேசன் கார்டுகள் அச்சடிக்கவில்லை.நிலைமை சரியான பிறகே கார்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்படும்” என்றார்.
What's Your Reaction?