விஜய் எனக்கு போட்டியா?- நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
விஜய் அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகர் விஜய் எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால் அவருக்கு மரியாதை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.இந்த நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த், தம்பி ராமையா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தனது படங்களில் அரசியல் வசனங்கள் வைத்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, மதுரையைச் சேர்ந்த விஜயராஜை விஜயகாந்தாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் ரஜினிகாந்த்தான் என்றும் கூறினார். விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி, எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர் சங்கியாக இருந்தால் "லால் சலாம்" படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்க மாட்டார் என்றார்.
மகளின் பேச்சை கேட்டு ரஜினிகாந்த் கண்கலங்கினார்.இதனால் விழா மேடை சிறிது நேரம் பரபரப்பானது. இதன் பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது நான் சொன்ன காக்கா-கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். அது என்னை வேதனையடைய செய்தது. தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
மேலும், நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன் என்றும் நடிகர் விஜய்யை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார்.
தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் எனக்கு போட்டி நான்தான் என கூறியுள்ளார். நடிகர் விஜய் எனக்கு போட்டியான நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டியா நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா-கழுகு கதையை ரசிகர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என பேசினார். இதன் மூலம் காக்கா-கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதனால் ரஜினி-விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுக்கொள்ளும் இணையப்போர் முற்றுபெறும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?