திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான நசரத்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், நசரத்பேட்டையில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் 7 பேர் அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை சாக்லேட் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைப்பதற்கு தங்களது வீட்டைப் பயன்படுத்திக் கொள்ள வைத்ததும் அம்பலமானது.
இந்த வழக்கு தொடர்பாக செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சூர்யா (29), சந்தோஷ்(21), தூத்துக்குடியை சேர்ந்த அமிர்தலிங்கம் (21), சூர்யா (21) உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சரியாக படிப்பு வராததால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருள் விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.