வங்கிக்கணக்கில் பூஜ்ஜியம் ! - சத்தீஸ்கரில் போட்டியிடும் பழங்குடியின வேட்பாளர்.. யார் இந்த சாந்திபாய்
சத்தீஸ்கரில் கோர்பா தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் பழங்குடியினப்பெண் சாந்திபாய் வங்கிக்கணக்கில் பூஜ்ஜியம் மட்டுமே உள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பல கோடீஸ்வர வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். பல கோடி செலவு செய்து வெற்றிக்காக பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆனால் ஏழை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் களமிறங்கிறங்கியுள்ளனர் என்பதுதான் சுவாரஸ்யம்.
இன்றைய தினம் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் மீதமுள்ள 7 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் கோர்பா தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சாந்திபாய் கவனத்தை ஈர்க்கும் வேட்பாளராக அப்பகுதியில் அறியப்படுகிறார்.
கவுரெல்லாவில் உள்ள பெத்ரபானி கிராமத்தைச் சேர்ந்த சாந்திபாய், பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்த சாந்திபாய், ஒரு குழந்தைக்கு தாயாக இருந்துகொண்டே தனது கணவரின் விவசாயத் தொழிலில் உதவி செய்து வருகிறார்.
எந்த அரசியல் கட்சியினரும் தங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவில்லை என்ற கவலையுடன் கணவர் ராம்குமாரின் ஆதரவோடு தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தார் சாந்திபாய். பட்டியல் பழங்குடியினருக்கு வேட்பாளர் டெபாசிட் தொகையில் பாதியாக ரூ.12,500 கட்ட வேண்டும் என்ற நிலையில், தங்கள் விவசாய சேமிப்பையும், தம் சமூகமக்களின் ஆதரவுடனும் டெபாசிட் பணத்தை சாந்திபாய் செலுத்தினார். மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் சாந்திபாய் வசித்து வரும் பெத்ரபானி கிராமம் அமைந்துள்ள நிலையில், முறையான சாலைவசதியில்லை. அங்கு பொதுப்போக்குவரத்துக்கும் வழியில்லை.
பல தசாப்தங்களாக பைகா சமூகத்தினர் வாழ்ந்து வரும் தனது கிராமத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக சாந்திபாய் தெரிவித்துள்ளார். தனக்கு அப்பகுதியினர் சிறந்த ஆதரவை தருவதாகக் கூறும் சாந்திபாய், பாஜகவின் சரோஜ் பாண்டே, காங்கிரசின் ஜோத்சனா மஹந்த் ஆகிய இருவரையும் எதிர்த்து தேர்தலில் களம் காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தனது வங்கிக்கணக்கில் பணம் எதுவுமில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?