பன்முகக் கலைஞர்.. 10 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு.. தயார் நிலையில் புத்தகங்கள்

10 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி பாடம் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 1, 2024 - 11:04
பன்முகக் கலைஞர்.. 10 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு.. தயார் நிலையில் புத்தகங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி அவர்கள் பன்முக தன்மை கொண்டவர் என்பதை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உள்ளம் கொண்ட கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக்கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செந்தமிழ் கலைஞர், ஏற்றமுள தமிழில் இன்றுமுள கலைஞர் என மேற்கண்ட தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகளில் அவர் செய்த சாதனைகள் பாடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது

மேலும் அவர் பணியாற்றிய திரைப்படங்களில் சமூக கருத்துகளை எடுத்துரைத்த திரைப்படங்கள் சிலவும் பாடப்புத்தகத்தில் இட.ம் பெற்றுள்ளது. மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர்.

 

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடி 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மாவட்டங்களுக்கு மூன்று கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போல, 50 லட்சம் புத்தகங்கள் வருகின்ற மே மாதம் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow