77 இண்டிகோ விமானங்கள் ரத்து : சென்னை பயணிகள் இன்றும் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்றைய தினம் 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சென்னையிலிருந்து பிற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 38 விமானங்களின் புறப்பாடு, 33 விமானங்களின் வருகை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இன்றுடன் 7வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே பணிக் குழு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை சீரடையத் தொடங்கியுள்ளது.
ரூ. 610 கோடி டிக்கெட் பணம் ஒப்படைப்பு
ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், விமான சேவைகள் டிச.10-க்குள் நிலைமை சீராக்கப்படும் என்று நம்புவதாக இண்டிகோ நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியதால், பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
What's Your Reaction?

