இணையுங்கள்.. உத்தவ் தாக்கரே, சரத்பவாருக்கு மோடி.அழைப்பு.. வாய்ப்பில்ல ராஜா.. சரத்பவார் பதிலடி

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உங்கள் கட்சியை மாய்த்துக்கொள்வதற்கு பதிலாக, அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி சேருங்கள்" என்று உத்தவ் தாக்கரே, சரத்பவாருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

May 11, 2024 - 16:41
இணையுங்கள்.. உத்தவ் தாக்கரே, சரத்பவாருக்கு மோடி.அழைப்பு.. வாய்ப்பில்ல ராஜா.. சரத்பவார் பதிலடி

நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் தலைமையிலான சிவசேனா ( உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான சிவசேனா ( ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவார்) கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நலந்துர்பார் தொகுதியில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "40 - 50 ஆண்டுகால அரசியல் களத்தில் இருக்கும் சரத்பவார் பரமதி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பிறகு மிகவும் கவலையாக இருக்கிறார். ஜூன் 4-ஆம் தெதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்ள சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிடும். அதாவது போலியான தேசியவாத காங்கிரஸ் மற்றும் போலியான சிவசேனா கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிடும். 

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உங்கள் கட்சியை மாய்த்துக்கொள்வதற்கு பதிலாக, அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி சேருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள சரத் பவார், "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத எந்த ஒரு கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். பிரதமர் மோடியின் அண்மைக்கால பேச்சுக்கள் இரண்டு பிரிவினரிடையே மோதலை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தேசத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தராத இடங்களில் நானும் எனது கட்சியினரும் அங்கம் வகிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியின் முக்கிய எம்எல்ஏ-க்களுடன் பிரிந்து சென்று பாஜகவிற்கு ஆதரவளித்தார். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. 

தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதேபோல கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் அக்கட்சியிலிருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து அவர் துணை முதல்வர் ஆனார். 

மகாராஷ்டிராவில் பிரதான கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் உடைந்துள்ளன. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக முக்கியமாக எதிர்நோக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow