தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல் - ஜம்முகாஷ்மீரில் விமானப்படை வீரர் வீரமரணம் !
ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
அனந்த்னாக் - ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான பூஞ்ச்சில், வரும் 25ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை வீரர்கள் சாலை மார்க்கமாக அங்கிருந்த பயிற்சி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். தொடர்ந்து பூஞ்ச் மாவட்டம் ஷாதிதாருக்கு அருகே சென்றபோது, வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத நிலையில், விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வாகனம் தீப்பிடித்து எரிந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகி பதற்றத்தை அதிகரித்தது. தாக்குதல் நடத்திவிட்டு ஆயுதங்களுடன் அருகில் இருந்த காட்டுக்குள் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்த நிலையில், அனைவரும் உதம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மேலும் மூவர் நிலையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?