இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திய 78 வயது முதியவர்.. நடுக்கடலில் உயிரிழந்த சோகம்.. காரணம் என்ன?
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை செய்ய முயன்ற முதியவர் ஒருவர், நடுக்கடலில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை செய்வதை நீச்சல் வீரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 78 வயதான கோபால்ராவ் உட்பட சிலர் நீச்சல் போட்டியில் பங்கேற்க நேற்று (ஏப்ரல் 22) ராமேஸ்வரம் வந்தனர். உரிய அனுமதி பெற்ற பின் அங்கிருந்து இலங்கை தலைமன்னார் கடற்கரைக்கு படகு மூலம் சென்றனர்.
இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தலைமன்னார் பகுதியில் இருந்து நீச்சல் போட்டி தொடங்கியது. அப்போது, மூன்றாவது நபராக நீந்தி வந்த கோபால்ராவ் 3.10 மணியளவில் நீந்த முடியாமல் மயங்கினார். இதையடுத்து கோபால்ராவுடன் வந்தவர்கள் விரைந்து சென்று அவரை படகில் ஏற்றினர். உடனடியாக மருத்துவர் பரிசோதனை செய்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து நீச்சல் வீரர்கள் அனைவரும் நீந்துவதை நிறுத்திவிட்டு கோபால்ராவின் உடலை தனுஷ்கோடிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 78 வயதில் நீந்தி சாதனை படைக்க சென்ற நபர், நடுக்கடலில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக நீச்சல் வீரர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?