பணத்தை வீசிவிட்டு பறந்தோடிய கும்பல்... பறக்கும் படை அதிரடி...
வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த நபர்கள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டவுடன் பணத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதியில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு சிலர் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினரைக் கண்டவுடன் பணத்தை அங்கேயே வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து தூக்கி வீசப்பட்ட ரூ.2.38 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்தப் பணம் வாணியம்பாடி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பணப்பட்டுவாடா செய்தவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?