விமான நிலையத்தில் பேரணி... தேர்தல் நடத்தை விதிகளை மீறல்... தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் கூடியதாக தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

May 12, 2024 - 20:07
விமான நிலையத்தில் பேரணி... தேர்தல் நடத்தை விதிகளை மீறல்... தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் (மே 9) வழங்கினார்.

இந்த விருதை பெற்று கொண்ட தேமுதிக பொது செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான  பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று (மே 11) சென்னை வந்தனர். 

பதம்பூஷன் விருதுடன் வந்த பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க விமான நிலையத்தில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

சென்னை விமானநிலையம் வந்த பிரேமலதா, விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை  தொண்டர்களிடம் காண்பித்தார். அதன் பின் திறந்தவெளி வாகனத்தில் ஏறி பத்மபூஷன் விருதுடன் நின்றபடியே தொண்டர்களுக்கு கையசைத்தபடி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் போலீசார் மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனிடையே மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று இருந்தனர். 

ஆனால் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக ஆலந்தூர் தாசில்தாரும் உதவி தேர்தல் அதிகாரியுமான துளசிராமன் விமான நிலைய போலீசில் புகார் செய்தார். 

இந்த நிலையில், போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்பட 7 பிரிவுகளில் தேமுதிக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow