ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத கடல் சீற்றம் - தனுஷ்கோடி செல்ல தடை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Apr 1, 2024 - 10:50
ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத கடல் சீற்றம் - தனுஷ்கோடி செல்ல தடை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 20 அடிக்கு மேல் எழுந்து, கடல் மிக சீற்றமாக காணப்படுகிறது. பல இடங்களில் சாலைக்கு வந்த கடல் அலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, கோடை சீசன் துவங்கவுள்ளதால், அதிக்கப்படியான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் வரலாறு காணாத அளவில், கடல், சீற்றத்துடன் காணப்படுவதுடன், அலைகள் சுமார் 20 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழுந்து, கரையை தாண்டி ஒடுகிறது.

இதில், சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி கடல் அலைகள் நெடுஞ்சாலைக்கு வந்தது. அத்துடன், கற்களையும் இழுத்துக்கொண்டு வந்ததால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை மீனவர்கள் அமைத்திருக்கும் கடைகளில், கடல்நீர் சூழ்ந்திருப்பதால், மீனவர்களும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய தனுஷ்கோடி கடும்புயலை போல மீண்டும் இந்த கடல் அலை ஏற்படுத்திவிடுமோ, என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் உள்ளனர். 

இதனால், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow