மக்களவைத் தேர்தல் : ஆந்திரா உட்பட 9 மாநிலங்களில் 4-ம் கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்!
ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் உட்பட 9 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25, தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்திய பிரதேசத்தில் 8, மேற்கு வங்கத்தில் 8, பீகாரில் 5, ஒடிசாவில் 4, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 என 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் ஆந்திர மாநிலத்தின் கடப்பா தொகுதியில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது உறவினரான ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டியை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மேற்கு வங்கத்தில் கிருஷ்ணா நகரில் மஹுவா மொய்தரா களம் காணுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். தெலங்கானாவின் ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைஸி போட்டியிடுகிறார்.
What's Your Reaction?