தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டி வழக்கு 

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதை  தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த உத்தரவிட கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Oct 19, 2024 - 17:08
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டி வழக்கு 
madhurai high court branch

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. ஆகவே, இந்தியக் கடற்படைக் கப்பல், எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து, கைது செய்வதையும்  தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கில் பிரதமர் அலுவலக முதன்மை செயலரை தேவையின்றி சேர்த்துள்ளதாகவும், அவரை வழக்கிலிருந்து நீக்குமாறும் ஒன்றிய அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பிரதமர் அலுவலக செயலாளர் வழக்கில் சேர்க்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை, ஏன் அவரை வழக்கிலிருந்து நீக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர். மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினால் சரியாகும் என்று மனுதாரர் நினைத்ததால்தான் செயலாளரைச் சேர்த்துள்ளார் இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினர்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து பிரதம அலுவலக செயலாளர், ஒன்றிய உள்துறைச் செயலாளர் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow