தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை : அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை...

பிற மாநிலங்களின் நடைமுறையை கேட்டபின்பு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் - அரசு

Mar 11, 2024 - 15:59
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை : அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை...

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை 5 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம். அந்த இடைவெளியில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டிய பகுதிகளை நீக்கலாம் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரி கடந்த 2012 இல் லோக் சத்தா கட்சி மாநில தலைவர் ஜெகதீஸ்வரன், 2015 இல் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் 2023 இல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று ( மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் P.S.ராமன் ஆஜராகி, பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பிற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்ற தகவலை சேகரித்து வருவதாக கூறினார். 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளதாகவும் மீதமுள்ள மாநிலங்களிடம் இருந்து தகவல்களை பெற்ற பின், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்கள் குற்றச்சாட்டு என சுட்டிக்காட்டினர். எனவே நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் எனவும் அந்த இடைவெளியில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டிய பகுதிகளை நீக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர். தொடர்ந்து அரசின் நடவடிக்கையில் அடுத்தக் கட்ட நகர்வுகளை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow