கலாஷேத்ராவில் மீண்டும் களேபரம்.. முன்னாள் நடன ஆசிரியர் கைது 15 ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

கலாஷேத்ராவில் இன்னொரு பாலியல் புகார் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது. முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் பேராசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Apr 23, 2024 - 21:47
கலாஷேத்ராவில் மீண்டும் களேபரம்.. முன்னாள் நடன ஆசிரியர் கைது 15 ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நிறுவனம், சென்னை திருவான்மியூரில் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியரான  ஸ்ரீஜித் கிருஷ்ணன் என்பவர், 15 வருடங்களுக்கு முன் அதாவது 1995 – 2007 காலக்கட்டத்தில் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வெளிநாட்டில் இருந்து மாணவிகள் இருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர்.

 

 

இதன் அடிப்படையில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய  போலீசார், அவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தியுள்ளனர்.  அந்த விசாரணையில் 15 வருடங்களுக்கு முன் நடன பேராசிரியர் ஸ்ரீஜித், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

 

குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீஜித் தற்போது கலாஷேத்ராவில் வேலை செய்யவில்லை என்றும், அடையாறில் தனியாக நடன பள்ளியை அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

இதேபோல், கடந்தாண்டும் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 4 பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, மாணவிகளின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கலாஷேத்ராவின் முன்னாள் பேராசிரியரான ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் ஒரு முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா, மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow