Nirmala Devi case: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அதிரடி தீர்ப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி அறிவிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Apr 30, 2024 - 07:51
Apr 30, 2024 - 20:20
Nirmala Devi case: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அதிரடி தீர்ப்பு

குரு என்பவர் நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால் சில ஆசிரியர்கள் பயிரை மேயும் வேலிகளாக இருக்கின்றனர். மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆசிரியர்கள் ஒரு ரகம் என்றால் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி செய்த தவறு மன்னிக்க முடியாத குற்றம். மாணவிகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறி தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.  அதற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவிக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். இவருடைய மனைவி நிர்மலா தேவி, 54). ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் சில வழிமுறைகளை கேட்டால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறினார். 

பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயன்றதாக நிர்மலா தேவி மீது பாதிக்கப்பட்ட மாணவிகளும் பெற்றோர்களும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதையடுத்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.  அனைத்து விசாரணையும் நிறைவடைந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு முருகன், கருப்பசாமி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். 

இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அமர வைக்கப்பட்டு இருந்தார். வழக்கமாக புடவையில் நீதிமன்றத்திற்கு வரும் நிர்மலா தேவி நேற்றைய தினம் சுடிதார் அணிந்து வந்திருந்தார். தனக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துதானோ என்னவே முகத்தில் எந்த வித சலனமும் இன்றி அமர்ந்திருந்தார். 

நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்த போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்ட வில்லை நிர்மலா தேவி. காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி. பின்னர் அரசு வக்கீ்ல் சந்திரசேகரன், நிர்மலாதேவி தரப்பு வக்கீல் சுரேஷ் நெப்போலியன் ஆகியோர் வாதிட்டனர். வழக்கில் இருந்து நிர்மலாதேவியையும் விடுவிக்க அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஏப்ரல் 30) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை கோர்ட்டு வழங்கி உள்ளது என்று இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். முதல் குற்றவாளியான நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச்சட்டம் 370 (1), 370 (3), 5 (1)ஏ, 9, 67 ஆகிய 5 பிரிவுகளின்படி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பதால், அவரை போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர். சிறை தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதால் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்படி, தண்டனை வழங்குவதற்கு முன்பு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதி முன்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

நிர்மலா தேவியால் எந்த ஒரு மாணவிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நிர்மலா தேவிக்கான தண்டனையை குறைக்க கூடாது; அவருக்கான  குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பகவதி அம்மாள், தண்டனை விவரத்தை சிறிது நேரம் தள்ளி வைத்தார்.

இதனையடுத்து மாலை 5 மணிக்கு மேல் தண்டனை விபரத்தை நீதிபதி பகவதி அம்மாள் வாசித்தார். மாணவிகளை தவறாக வழி நடத்திய நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து நிதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பினை நீதிபதி வாசித்த போது முகத்தில் எந்த வித சலனமும் இன்றி கேட்டுக்கொண்டிருந்தார் நிர்மலா தேவி. 6 ஆண்டு காலத்திற்கும் மேலாக நடந்த வழக்கில் இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow