பிஞ்சு உயிர்களை பலிவாங்கிய ஏரி.. நாயை குளிப்பாட்ட சென்றபோது நேர்ந்த சோகம்..

Apr 23, 2024 - 21:42
பிஞ்சு உயிர்களை பலிவாங்கிய ஏரி.. நாயை குளிப்பாட்ட சென்றபோது நேர்ந்த சோகம்..

வாணியம்பாடி அருகே வளர்ப்பு நாயை குளிக்க வைக்க ஏரிக்கு சென்ற அக்காவும் தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 8 வயதில் ஜோதிகா என்ற மகளும் 7 வயதில் ஜோதிஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ஜோதிகாவும், ஜோதிஷும் தங்களது வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக அருகில் உள்ள இறா குட்டை என்ற ஏரிக்கு சென்றனர். நாயை குளிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இருவரும் திடீரென நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயை குளிப்பாட்டுவதற்காக சென்ற அக்காவும் தம்பியும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறார்கள் தனியாக நீர்நிலைகளுக்கு செல்லாமல் பெற்றோர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow