சொட்டு தண்ணி இல்ல.. மொத்தமாக வறண்ட கல்லணை.. கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி.. ஜூன் 12ல் மேட்டூர் திறக்கப்படுமா?

திருச்சியை அடுத்த கல்லணை வறண்டு கிடப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

May 7, 2024 - 19:51
சொட்டு தண்ணி இல்ல.. மொத்தமாக வறண்ட கல்லணை.. கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி.. ஜூன் 12ல் மேட்டூர் திறக்கப்படுமா?

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கம். ஜூன் 12 திறக்கப்படும்  தண்ணீர் ஜூன் 16ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் நீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என 3 ஆறுகள் 36 கிளையாறு 27,000 வாய்க்கால்கள் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் அளவிற்கு டெல்டா மாவட்டம் முழுவதும் போக சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

கடந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் மேட்டூரில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டதால் அக்டோபர் மாதம் 10 தேதியே மூடப்பட்டது. 

இதனால் டெல்டா மாவட்டத்தில் செய்யப்பட்ட 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியில் பெரும்பாலான பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. கடும் சிரமத்திற்கு இடையே குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டும் மேட்டூரில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததாலும் போதிய அளவுக்கு மழை இல்லாத காரணத்தினாலும் ஜூன் 12 தண்ணீர் திறப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் 10 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடியும் கேள்விக்குறியாகவே உள்ளது. 

வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் கோடை பருவத்தில் 37,500 ஏக்கர் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு 30,750 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது.  போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இல்லாததாலும் மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காததாலும் காய்ந்து கருகி வருகிறது. 

இதே நிலை ஏற்பட்டால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு குடிநீர் தட்டுப்பாடும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow