4 ஆண்டாக கொடுக்காத இழப்பீடு.. சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து திருவோடு ஏந்திய நாகூர் விவசாயிகள்

நாகை மாவட்டம் நாகூர் அருகே சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

May 7, 2024 - 20:08
4 ஆண்டாக கொடுக்காத இழப்பீடு.. சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து திருவோடு ஏந்திய நாகூர் விவசாயிகள்

நாகூர் அடுத்த பனங்குடி அருகே சி.பி.சி.எல் நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    

இந்த போராட்டத்தில், நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சிபிசிஎல் நிறுவனம் நிலஅளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும். 3 கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் சட்டி மற்றும் திருவோடு ஏந்தி 7வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், நிலம் கையகப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட முட்டம், உத்தமசோழபுரம் ஊராட்சி சிறுநங்கை கிராமங்களில் விவசாய கூலித்தொழிலாளர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் நிலத்தை தங்களிடமே ஒப்படைத்து விடுங்கள் எனவும் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow