தென்பெண்ணையாற்றில் கிடைத்த செப்பு நாணயங்கள்.. விஜய நகர காலத்து பொக்கிஷங்கள்

May 11, 2024 - 17:27
தென்பெண்ணையாற்றில் கிடைத்த செப்பு நாணயங்கள்.. விஜய நகர காலத்து பொக்கிஷங்கள்

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் நடத்தப்பட்ட களஆய்வில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் துறை ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அங்கு பழங்கால 2 செப்பு நாணயங்களை கண்டெடுத்தனர். அந்த நாணயங்களை ஆய்வு செய்ததில் அவை 15-ம் நூற்றாண்டு விஜயநகர காலத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. மேலும் இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவமும், பின்பக்கத்தில் தெலுங்கில் தேவராயர் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதேபோல் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதமும் இப்பகுதியில் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. அது மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என ஆய்வில் தெரியவந்தது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட களஆய்வில் 3 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 சுமார் 950 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜன் பெயர் பொறித்த சோழர் கால நாணயங்கள், மற்றொன்று விஜயநகர கால நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow