+2 பொதுத்தேர்வில் அசத்திய இரட்டையர்கள்.. மதிப்பெண் பார்த்து ஆசிரியர்கள் ஆச்சரியம்
நாகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (06-05-2024) வெளியாகின. வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் +2 பொதுத்தேர்வில், 600-க்கு தலா 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்களான நிகில், நிர்மல் ஆகியோர் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோது அதை ஆர்வமாக பார்த்தனர். அப்போது இருவரும் தலா 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
பொதுவாக இரட்டையர்களாக பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவரது செயல்பாடுகள் ஒன்றாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த இரட்டையர்கள், தேர்விலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தஞ்சாவூர் - அரியலூர் மாவட்ட எல்லையான அணைக்கரை அருகே உள்ள தத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஷேக் ரகுமான் என்ற மாணவர் +2 பொதுத்தேர்வில் 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். குழவடையான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவர் ஷேக் ரகுமான், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் தலா நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 98 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?