நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Jan 12, 2024 - 13:46
Jan 12, 2024 - 22:08
நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 44 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்திருந்தார்.

 அதேசமயம் வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால்  கவுன்சிலர்களை திமுக தலைமை சமாதானப்படுத்தியது. அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வந்து கவுன்சிலர்களை சரி கட்டினார். மேலும் முன்னெச்சரிக்கையாக திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. நேற்று நெல்லையிலிருந்து கவுன்சிலர்கள் அனைவரும் கிளம்பி சென்று விட்டனர். இது போன்ற சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்தது.

 அதன்படி தற்போது மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு சென்றார். அதே சமயம் தற்போது வரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு கவுன்சிலர்கள் கூட இங்கு வரவில்லை. நெல்லை மாநகராட்சி பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் இதில் 45 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் மீதமுள்ள 10 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இருப்பினும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரில் ஒருவர் கூட தற்போது வரை வாக்கெடுப்பிற்கு வரவில்லை.

முன்னதாக பாதுகாப்பிற்காக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சுழல் நிலவியது.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கள் கூட கலந்து கொள்ளாததால் தீர்மானம் தோல்வி அடைந்தது’ என  தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow