நெல்லை உள்ளிட்ட 20 இடங்களில் இன்று என்.ஐ.ஏ சோதனை
வங்கியின் மூலம் ஹவாலா பணம் பரிமாற்றம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்.
சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 20 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது(35). இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீடு ஏர்வாடியில் உள்ளது. இன்று காலை ஏர்வாடியில் உள்ள அவரது வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி முகைதி நகரில் உள்ள ரிஜெக்ட் தெருவில் பக்ருதீன் அலி அகமது வீடு உள்ளது. இன்று காலை சுமார் 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரத் நாயக் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் எஸ்பிஐ வங்கியின் மேலாளர் பொன்ராஜ் மற்றும் நெல்லை பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல நிதி அலுவலர் நிதின் ஆகியோரும் இந்த சோதனையின்போது உடனிருந்தனர்.
வங்கியின் மூலம் ஹவாலா பணப் பரிமாற்றம் எதுவும் நடந்ததா? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை, கோவை உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், யூடியூப்பர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?