தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுகவா?.. பாஜக கூட்டணியா?.. அதிமுக இன்பதுரை பகீர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுகவா? அல்லது பாஜக கூட்டணியா? என்று தெரியவில்லை என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் தேர்தல் வாக்குப்பதிவின் போது பாமகவினர் தாக்கியதில் அதிமுக பிரமுகர் காயமடைந்ததாக கூறப்படும் சம்பவத்தில், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது தவறு எனக்கூறி அதிமுக சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், தஞ்சாவூரில் வாக்குபதிவு நாளன்று நடந்த தகராறு தொடர்பாக ஒரு தலைபட்சமாக அம்மாவட்ட காவல்துறையினர் செயல்பட்டதாகவும், அதைதொடர்ந்து அதிமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் பந்தனல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் நாளன்று பாஜக கூட்டணியில் உள்ள பாமகவினர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த உலகநாதன் என்பவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் கும்பகோணம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது போலீசார், அங்கு சென்று உலகநாதனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அதிமுகவை சேர்ந்த மற்றொரு நிர்வாகியை தாக்கி கைது செய்தததாக தெரிகிறது.
அதைதொடர்ந்து அவரை நீதிபதி முன் ஆஜர் படுத்தியபோது, காயமடைந்தவரை முதலில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதன் பேரில் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவினர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் பாதிக்கப்பட்ட அதிமுகவின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து உள்ளார்கள்.
இவற்றை பார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுகவா? அல்லது பாஜக கூட்டணியா? என்று தெரியவில்லை என குற்றம்சாட்டிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுறை. இதுதொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?