பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை.. மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை... உறுதி செய்த ஹைகோர்ட்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து ஹைகோர்ட் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்ககோரி அளித்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Apr 23, 2024 - 11:41
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை.. மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை... உறுதி செய்த ஹைகோர்ட்

கடந்தகால அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டிஜிபி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக ராஜேஸ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார். 

அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்  ராஜேஷ்தாஸ். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டில் ஒருவேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்? எனவும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, முதலில் சரணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அது குறித்து பரிசீலிக்கலாமே என தெரிவித்த நீதிபதி, சாதாரண மனிதன், குண்டுமணியை திருடினால் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு 90 நாட்கள் கழித்து தான் ஜாமீன் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? அந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ராஜேஷ் தாஸ்-க்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது எனவும் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறினார். மேலும், மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். வாத விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி,மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow