உதகையில் கோடை விழா.. இ பாஸ் இல்லாவிட்டால் கெட் அவுட்.. சோதனை சாவடிகளில் விறுவிறு பணிகள்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இ பாஸ் இல்லாவிட்டால் எல்லையில் நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற்ற பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரிக்கு வருகை தரும் பயணிகளுக்கு மூன்று வகையான அடையாள கோடுகளுடன் உள்ள இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களில் சீசன் தொடங்கியுள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று ( மே 7) முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதளம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் இருந்தால் போதுமானது. அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. இந்த நடைமுறையானது மே 7 முதல் 30ம் தேதி வரை சோதனை முறையில் அமலில் இருக்கும்.
வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து நீலகிரி வரும் மக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்தும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
உதகையில் வருகிற 10ஆம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர். தமிழக கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகள் இணையும் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் இ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என ஆர்டி ஓ செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசார் ஆய்வு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
இதேபோல் கோவையில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பர்லியாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இ பாஸ் தராத சுற்றுலா பயணிகள் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற்ற பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நீலகிரிக்கு வருகை தரும் பயணிகளுக்கு மூன்று வகையான அடையாள கோடுகளுடன் உள்ள இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சைநிற அடையாளக் கோடுடனும், வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக்கோடுடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதாநிற அடையாளக் கோட்டுடனும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் இயங்கும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து கழகம் மூலம் அசல் சான்று காண்பித்து இன்று (07.05.2024) முதல் 30.06.2024 வரையிலான காலகட்டத்திற்கு இ பாஸ் பெற்றுக் கொள்ளவும், மற்றவர்கள் ‘epass.tnega.org” என்ற இணைய முகவரியில் ஒருமுறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெற்றுக்கொண்டால் போதுமானது என்று ஏற்கனவே ஆட்சியர் மு.அருணா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் இந்த மூன்று கலர் இ பாஸ்கள் அதிகாரிகள் விரைந்து அடையாளம் காண உதவியாக இருக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக நூறு அதிகாரிகள் களப்பணி ஆற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 2 மாநில எல்லையில் அமைந்திருப்பதால், மாநில எல்லைகளில் 16 சோதனை சாவடிகள் மூலம் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ பாஸ் பெற்று வருகிறதா என கண்காணிக்கப்படுகின்றன. பேருந்து,சிற்றுந்து,கார்,ஜீப்,பைக் மூலம் வெவ்வேறு தேதிகளில் வருவதற்கு 21446 நபர்கள் இ பாஸ் விண்ணப்பித்து வாங்கியுள்ளதாகவும், இந்த இ பாஸ் மூலம் 2,78,430 பேர் வரை வர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாநிலம் /வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று (07 /05/ 2024) அன்று முதல் 30/ 06 / 2024 வரை இ- பாஸ் பதிவு செய்து வர வேண்டும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பூங்கொடி அறிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனிடையே கொடைக்கானலுக்கு இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் வெள்ளிநீர் வீழ்ச்சியில் இருக்கக்கூடிய சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் e pass உள்ள வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
What's Your Reaction?