கள்ளச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்... அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்!
ஏற்கெனவே சாராய வியாபாரி கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது கோவிந்தராஜின் மனைவி விஜயா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பெண்கள் உள்பட 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளியான சின்னத்துரை தலைமறைவாக உள்ளார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 33 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி விட்டது. அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், ''விஷச்சாராய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.
மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள் இந்த சம்பவம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், அமலாக்கப்பிரிவினரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி சமய் சிங் மீனா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவரது தலைமையிலான போலீசார், இன்று காலை முதல் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சாராய வியாபாரி கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது கோவிந்தராஜின் மனைவி விஜயா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பெண்கள் உள்பட 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளியான சின்னத்துரை என்பவர் தலைமறைவாக உள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 304(2) பிரிவின்படி மரணத்தை விளைவித்தல், 328 பிரிவின் கீழ் குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்ற பொருட்களால் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தி, சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
What's Your Reaction?