தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது... கள்ளச்சாராய புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை சட்டப்பேரவையில் பெரிய அளவில் கிளப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளன.

Jun 20, 2024 - 08:16
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது... கள்ளச்சாராய புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: மக்களவை தேர்தலுக்கு பிறகு முன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை கோவையில் முப்பெரும் விழா எடுத்து திமுக-கூட்டணி கட்சிகள் பிரம்மாண்டமாக கொண்டாடின.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று முதல் வரும் 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். இன்று கூட்டம் தொடங்கியதும் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. 

நாளை (21ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரையிலான 3 நாட்கள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிரொலிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளன. 

தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திமுக அரசு தடுக்க தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் பெரிய அளவில் கிளப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.  கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow