கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்...தவெக விஜய் சராமரி குற்றச்சாட்டு

'கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது'

Jun 20, 2024 - 09:40
Jun 20, 2024 - 09:58
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்...தவெக விஜய் சராமரி குற்றச்சாட்டு
நடிகர் விஜய்

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 பேர் பலியானதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியமே காரணம் என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 34 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 34 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலிறுத்தி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், '' கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுளள்னர். இதை தடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கோவிந்தராஜ், அவரது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுளள்னர். மேலும் 2 பெண்கள் உள்பட 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே காரணம் என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று விஜய் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow