பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது: கூட்டணி குறித்து எடப்பாடி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை கூட உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை எடப்பாடி வெளியிடுவார் என அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையன் அண்ணன் மகன் அதிகமுவில் ஐக்கியம்
இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் திமுகவில் சுற்றுச்சூழல் பிரிவில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் பலர் உடனிருந்தார்.
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து கே.கே.செல்வம் பேசினார் : ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக எங்கள் குடும்பம் இருந்து வந்திருக்கிறது. நாங்கள் இல்லாவிட்டால் 2016 தேர்தலில் எங்கள் சித்தப்பா செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். 2006 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.
நாங்களும் தொண்டர்களும் உழைத்ததாலேயே கோபிச்செட்டிபாளையத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதைக் கைவிட வேண்டும். திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் மிக அதிகமாக இருக்கிறது. திமுக தொண்டர்களுக்காககூட ஒரு காரியத்தை திமுக மாவட்டச் செயலாளரால் நிறைவேற்றி கொடுக்க முடியவில்லை. என்றார்.
What's Your Reaction?

