புதுச்சேரி அரசை பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் : ஸ்டாலினுக்கு விஜய் அட்வைஸ்
புதுச்சேரி அரசு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதை பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் அட்வைஸ் செய்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். மத்திய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுவை ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்குதான் தமிழ்நாடு தனி, புதுவை தனி. ஆனால், நாம் வேறுவேறு கிடையாது. நாம் அனைவரும் சொந்தம்தான்.தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுவை மட்டுமல்ல உலகில் எங்கிருந்தாலும் நம் வகையறா எல்லாம் நமது உறவுதான். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண்.
1977 இல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974 இல் புதுவையில் அவரது ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் அவரை மிஸ் செய்யாதீங்கனு எச்சரித்ததே புதுவைதான். தமிழகம் மாதிரியே புதுவை மக்களே என்னை 30 வருடமா என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீகள்.
விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது. நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர். புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. இதைப் பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும்.
வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரி அரசை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசாக மாற்ற தீர்மானம் போட்டு அனுப்பினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
மூடிய மில்களை திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. காரைக்கால் மாஹி, ஏனம் பகுதியில் முன்னேற்றமே இல்லை. புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் ரெயில் திட்டம் வேண்டும். புதுச்சேரி மக்களிடம் சொல்கிறேன். தி.மு.க.வை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறவில்லை. அதனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது. தொழில் வளர்ச்சியும் வேண்டும். இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேசன் கடைகளை தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்
What's Your Reaction?

