கச்சத்தீவு விவகாரம்.. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த 3 கேள்விகள்

பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு.

Apr 1, 2024 - 17:15
Apr 1, 2024 - 17:20
கச்சத்தீவு விவகாரம்.. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த 3 கேள்விகள்

பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. தேர்தல் பரப்புரையில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எதிரெதிர் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றன. பரப்புரை மேடைகளிலும், வாகனப் பரப்புரையிலும், சமூகவலைதளங்களிலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

கச்சத்தீவு விவகாரம் திடீரென லோக்சபா தேர்தல் களத்தில் பேசப்படுகிறது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விவரங்களை பெற்றுள்ளார். இதை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி உள்ளிட்டோர் திமுக, காங்கிரஸை விமர்சித்து வருகிறார்கள்.

நேற்று எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி, இலங்கைக்கு கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்தும், காங்கிரஸ் மற்றும் திமுக குறித்தும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதற்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பத்தாண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 

ஒன்று, தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?. இரண்டு, இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?. 

மூன்று, பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow