Ilaiyaraaja: “Incredible India போல Incredible இளையராஜா”..போறபோக்குல தேவா? டென்ஷனான இசைஞானி!
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

சென்னை: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமா மட்டுமின்றி, இசைத்துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இளையராஜா, முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அதன்படி, வரும் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நடைபெறும் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ’வேலியன்ட்’ என்ற பெயரில் இளையராஜா கம்போஸ் செய்துள்ள இந்த சிம்பொனியை, உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்கள் வாசிக்க உள்ளனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட இளையராஜா, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய சிம்பொனியை வெளியிட லண்டன் செல்கிறேன். உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கலைஞர்கள் தனது சிம்பொனியை வாசிக்க இருக்கின்றனர். இந்த சிம்பொனியை காண வரும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. இது என்னுடைய பெருமை அல்ல. இந்திய நாட்டின் பெருமை. இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்க எல்லோரையும் வேண்டுகிறேன்” என்றார்.
அநாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்:இளையராஜா
தொடர்ந்து பேசிய இளையராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது சில கேள்விகளைக் கேட்டதும் டென்ஷனான இளையராஜா, “இடைஞ்சலான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம்; நல்ல நிகழ்ச்சிக்காக போகும் போது நல்ல மனசோடு வந்துருக்கீங்க, எல்லோரும் வாழ்த்தி இந்த நிகழ்ச்சி நல்லபடியா நடக்க இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். Incredible இந்தியா போல Incredible இளையராஜா. என்னைப்போல் யாரும் இல்லை. இனி வரப்போவதுமில்லை” எனக் கூறினார்.
அதன்பின்னர், “தன்னுடைய பாடலை 2கே கிட்ஸ் அனைவரும் பயன்படுத்துங்கள், அதற்கு காப்பி ரைட்ஸ் எதுவும் கேட்கமாட்டேன் என தேவா கூறியிருந்தார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் மீண்டும் கடுப்பான இளையராஜா, “அதற்காகவா இங்கு வந்திருக்கிறேன். அநாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன்” என்றார். சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இளையராஜா, செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசை நிகழ்ச்சி வெற்றிப் பெற வாழ்த்துத் தெரிவித்தனர்.
Read more:
மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: பங்கேற்ற 56 கட்சிகள்- முதல்வர் மொழிந்த தீர்மானங்கள் என்ன?
What's Your Reaction?






