சுறுசுறுப்பாகும் அதிமுக.. இன்று முதல் விருப்பமனு விநியோகம்..! எவ்வளவு கட்டணம் தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்பமனு வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ள தொகுதி பங்கீட்டுக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு , தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என நான்கு குழுக்களை அதிமுக அமைத்தது .
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, கடந்த 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு வழங்கப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தொகுதிக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இன்று முதல் சமர்ப்பிக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விருப்பமனு கட்டணமாக பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித்தொகுதிக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?