சினேகன் பரபரப்பு புகார்.. பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி கைது.. மோசடி வழக்கின் பின்னணி என்ன?
பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரின் பேரில் மோசடி வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
2015ம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை சினேகன் தொடங்கி நடத்தி வந்த நிலையில், அதே பெயரில் 2017ம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி அறக்கட்டளையை தொடங்கினார். தொடர்ந்து தனது பவுண்டேசனின் பெயரை தவறாக பயன்படுத்தி ஜெயலட்சுமி நிதியுதவி பெறுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகாரளித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஜெயலட்சுமியும் புகாரளித்த நிலையில், சினேகன் தொடர்ந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் சினேகன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று 5 மணி நேரம் சோதனை நடத்திய போலீசார் அறக்கட்டளை தொடர்பான சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்காக ஜெயலட்சுமியை அழைத்துச்சென்ற போது, அறக்கட்டளையிலிருந்து நான் பணம் எடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் ஆவேசத்துடன் கூறினார். தொடர்ந்து அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீசார், ஜெயலலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.
What's Your Reaction?