திரிஷா குறித்து அவதூறு - மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் 

பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

Dec 22, 2023 - 14:28
Dec 22, 2023 - 14:37
திரிஷா  குறித்து அவதூறு  - மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் 

நடிகை திரிஷா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த நவம்பர் 11ம் தேதி தமிழக அரசியலின் முக்கிய விசயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட போஸ்டர்களில் ஆண் நாயகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண் நாயகிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.இதையடுத்து, திரைப்பட நடிகை  திரிஷா  கிருஷ்ணன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. 

தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர் பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் நவ 23ம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கோரிய நிலையில், நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கருத்து தெரிவித்திருப்பதால் தலா 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் என்ன கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். சமூக வளைதளங்களால் இளைஞர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பெண் நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருப்பதற்கு எதிராக மற்ற நடிகர்கள் பேசியது இயல்பானது. அதனால், மானநஷ்ட வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்து, அவதூறாக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow