மூன்றே நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர்..!
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளதாகக் கூறி மூன்றே நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி தமது உரையை முடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணிக்கத்தால், பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
கடந்த ஆண்டு உரையை மாற்றி வாசித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய காட்சிகள் தான் இவை.. தற்போதும் கிட்டதட்ட இதே நிலை தான், ஆனால் வேறு கோணத்தில் உருவெடுத்துள்ளது.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆரம்பத்தில் இருந்தே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரியார், ‘அண்ணா, தமிழ்நாடு, சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு’என்ற வாக்கியங்களை புறக்கணித்து ஆளுநர் தமது உரையை விரைவில் முடித்தார். அப்போது பேரவையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதையறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக வெளிநடப்பு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்தது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. அரசு மரியாதையுடன் சட்டப்பேரவை வந்தடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த அவர்,
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து"
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
நாட்டு மக்களை அரசு கவனிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக இக்குறள் எடுத்துக்கூறுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேசிய அவர், சட்டப்பேரவையில் தேசியகீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதோடு உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் அரசின் உரையை முழுமையாக வாசிக்க விரும்பவில்லை எனவும் வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் எனவும் கூறி உரையை புறக்கணிப்பதாகக் தெரிவித்தார். தொடர்ந்து வாழ்க தமிழ்நாடு - வாழ்க பாரதம் எனக்கூறி தனது உரையை ஆளுநர் புறக்கணித்தார்.
இந்த நிலையில் ஆளுநர் புறக்கணித்த உரையின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | "PM cares-ல் இருந்து நிதிகொடுங்கள் ஆளுநரே..!"
What's Your Reaction?