தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு.. ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளை சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
இதன்படி, நடப்பு கல்வியாண்டில் 25% இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக தனியார் பள்ளிகளின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு, குழந்தைகள் 2020 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 2021 ஜூலை 31-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 2019 ஜூலை 31-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விவரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரத்தையும் மே 27-ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக மே 28-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான விண்ணப்பங்களை இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இன்று (22-04-2024) முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ரூ.400 கோடியை தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?