தேரோடும் எங்க சீரான மதுரையிலே.. மாசி வீதிகளில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவின் 11ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். கடந்த 19ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. செங்கோல் ஏந்தி மதுரையை அரசாட்சி செய்கிறார் மீனாட்சி அம்மன்.
20ஆம் தேதியன்று எட்டு திக்கும் வலம் வந்து வெற்றி கண்ட மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர். திருக்கல்யாண விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றனர். நேற்றிரவு யானை வாகனத்தில் தங்க அம்பாரியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. இதனையொட்டி, சுவாமியும் அம்மனும் அதிகாலை 4.00 மணிமுதல் 4.30 மணிக்குள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள ம. முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர்.
சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும் , அருள்மிகு மீனாட்சிஅம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஹர ஹர சிவ சிவ என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி , மேலமாசி வீதி , வடக்குமாசி , வழியாக வலம் வந்து இன்று நண்பகல் நிலையை அடையும்.தேர் வலம் வந்த நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பக்கம் தேரேட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மதுரை மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்றது. அழகர் கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க நேற்று மாலை கள்ளழகர் அழகர் தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வரிசையாக மண்டகப்படிகளில் எழுந்தருளி இன்று காலையில் மூன்று மாவடிக்கு வந்தடைந்தார். அப்போது காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர்.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளைய தினம் ( ஏப்ரல் 23) அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?