தலைமை காவலர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு... 12 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு...
மயிலாடுதுறையில் சாராய கடத்தலை தடுக்க முயன்ற தலைமை காவலர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சாராய வியாபாரிகள் 6 பேரை குற்றவாளியாக மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சந்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் காரில் சாராயம் கடத்தி சென்றுள்ளனர். நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றனர்.
கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் சென்றபோது சாராயம் கடத்தி சென்ற காரை போலீசார் குழுவினர் வழமறித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைமை காவலர் ரவிச்சந்திரன் (45) என்பவர் காரை வழிமறித்துள்ளார். இதையடுத்து காரை ஓட்டிய மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர் காரை நிறுத்தாமல் தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது காரை மோதி அவர் மீது ஏற்றி விட்டு நிற்காமல் தப்பி சென்றள்ளனர்.
கார் ஏறியதில் தலைமை காவலர் ரவிசந்திரனின் மார்பு எழும்புகள் உடைந்து படுகாயமடைந்த நிலையில் சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (54), புளியம்பேட்டை கருணாகரன் (54), மீன்சுருட்டி சங்கர் (44), ராமமூர்த்தி (44) ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானபோது கலைச்செல்வனுக்கு பதிலாக செல்வமும், கருணாகரனுக்கு பதிலாக செல்வக்குமாரும் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு பொய் தகவலை கூறி சரணடைந்துள்ளனர்.
இதனால் இவ்வழக்கில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ராசேயோன் ஆஜராகி நிறுத்திய 21 சாட்சிகள் பிறழ்சாட்சிகளின்றி சாட்சியம் அளித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை சேர்ந்த தலைமை காவலரை பணியில் இருந்தபோது காரை ஏற்றி கொலை செய்ததால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, கலைச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று கூறி தண்டனை வழங்காமல் தீர்ப்பை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
What's Your Reaction?