குரூப்-2, குரூப்-2 ஏ-வுக்கு தனித்தனியே தேர்வு முறை... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2, குரூப் 2 ஏ ஒருங்கிணைந்த தேர்வு முறையால் முடிவுகளை வெளியிடுவதிலும், கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்படுவதால் இரு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வு முறை நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முதலிய பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நடப்பாண்டிற்கான அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்த குரூப்-1 பதவிகளுக்கான 65 பணியிடங்களில் எண்ணிக்கை தற்போது 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் எனவும், இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளில் 29 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1B, 1C தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இனி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என்றும், இதனால் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, பணி நியமனம் வழங்கப்பட முடியும் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை நடந்து வந்த ஒருங்கிணைந்த தேர்வு இனி குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு நடைபெறாமல் தனித்தனியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடத்தப்படும் போட்டி தேர்வுகள் குறித்த திருத்த அட்டவணையில், மொத்தம் 9283 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.