கச்சத்தீவு திருவிழா: படகில் செல்ல அனுமதி கோரி மனு - ஹைகோர்ட் உத்தரவு என்ன?

Feb 21, 2024 - 17:15
கச்சத்தீவு திருவிழா: படகில் செல்ல அனுமதி கோரி மனு - ஹைகோர்ட் உத்தரவு என்ன?

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு வழிபாடு நடத்த இயந்திரம் பொருத்திய பைப்பர் படகில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனு குறித்து ஆட்சியர் உரிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் இந்த திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுபடகில் மீனவர்கள், பொதுமக்கள் சென்று வந்தனர். ஆனால் 2013ம் ஆண்டில் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டது. 

விசைப்படகில் கச்சத்தீவு செல்ல ஒரு நபருக்கு ரூ.2,000-க்கு மேல் தேவைப்படுவதால் இயந்திரம் பொருத்திய பைப்பர் படகில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த பிரின்சோ ரைமண்ட் என்பவர் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கச்சத்தீவு திருவிழாவிற்கு எந்த வகை படகுகள் அனுமதிக்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, மனுதாரர் தரப்பில், தற்போது காலத்திற்கு ஏற்ப குதிரைத்திறன் அதிகமுள்ள இயந்திரம் பொருத்திய பைப்பர் படகுகளை மீனவர்கள் அதிகம் பயன்படுத்துவதால், பைப்பர் படகுகள் மூலம் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி, இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கச்சத்தீவு திருவிழாவிற்கான நடைமுறைகள் இந்தாண்டு நிறைவடைந்து விட்டது. இருப்பினும் அடுத்த ஆண்டிற்குள் மீனவர்கள் மற்றும் மீனவக்குடும்பங்களை கச்சத்தீவு திருவிழாவிற்கு பைப்பர் படகில் செல்ல 12 வாரங்களில் ஆட்சியர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow