வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு!

Feb 27, 2024 - 21:35
Feb 28, 2024 - 13:13
வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 2-வது முறையாக தாக்கல் செய்துள்ள மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (பிப்.28) தீர்ப்பளிக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து, கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது. அவருக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு இதுவரை 22 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 14, 15 மற்றும் 21-ம் தேதிகளில் நடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் கடந்த பிப்.21-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை (பிப்.28) காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow